கடந்த நூற்றாண்டின், வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த மகளிரை மையமாக்கி, அவர்களின் வாழ்வுமுறையை ஒட்டி எழுதப்பட்ட நாவலே இந்த பாலங்கள். இளவயது, மத்திமம், முதுமை இக்காலங்களில், பெண்கள் தங்கள் வாழ்வில் ஏற்கும் பாத்திரங்கள் எவ்வாறு வேறுபடுகிறது என்று தெளிவாய் எடுத்துரைத்திருக்கிறார் ஆசிரியர்.
இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டில், ஒரு நூறாண்டு முன் சென்று, ஒரு பெண்ணாய் பிறந்தவரின் வாழ்க்கையை நோக்கும்போது, வியப்பும் களைப்பும் ஏற்படுகிறது. வியப்பு, அவர்களின் வலிமையைப்பார்த்து! களைப்பு, அவர்கள் பின்பற்றிய சடங்குகளைப்பார்த்து!
இச்சடங்குகளின் பின் காரணங்கள் இருந்த போதிலும், இவை ஏற்படுத்தும் களைப்பு அதிகம்தான் என்று தோன்றுகிறது. வேலைக்குச்சென்று, வீட்டையும் பார்த்துக்கொள்ளும் இக்கால மகளிர் எண்ணிப்பார்க்கவும் துணியாத சடங்குகள்.

பெண் சமூகத்தின் முன்னேற்றம் மற்றும் நமது சமுதாயம் ஏற்றுக்கொண்ட முற்போக்குச் சிந்தனைகளே, இவை மாறக் காரணம். ஆனால் சில சடங்குகளின் ஊடாய், பின்னி பேணப்பட்ட உறவுகளும் இன்று மலிந்து போய்விட்டதோ என்றும் தோன்ற வைக்கிறது.
இக்காலத்து பெண்ணின் பார்வையில் நோக்கும்போது, நமது இன்றைய சுதந்திரம் உண்மையில் ஆச்சர்யம் தான். மேலும் ஒரு பெண்,எப்படி உறவுகளுக்கு பாலமாய் செயல்பட்டு, குடும்பம் என்னும் கூட்டை கலையாமல் பேணுகிறாள் என்பதும், இக்கதை உணர்த்துகிறது. இந்த கருத்தை நம் கண் முன் நடத்திக்காட்டும் நம் வீட்டுப் பெண்களின் முதிர்ச்சி, அப்போது புரியலாம் நமக்கு.
காலத்தை பளிங்கு போல் படம்பிடித்து காட்டி, கால மாற்றத்தின் நன்மை தீமைகளையும் உணர்த்தி, நம்மை சரிபடுத்திக்கொள்ளும் சிந்தனையை தோற்றுவிக்கும் ஒரு நல்ல புத்தகம்.
To buy from Amazon, please click below
Comments